வார ராசிபலன் 7/17/2012 முதல் 7/23/2012 வரை
மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் கேது சாரம் பெற, கேது ராசிக்கு 2-ல் அந்த வீட்டுக்குடைய சுக்கிரனோடு சேர்ந்திருக்கிறார். ராசியை பாக்கியாதிபதி குரு பார்க்கிறார். செவ்வாயும் சூரியனும் பரிவர்த்தனை. எனவே இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு இனிய நற்பலன்களாகவே நடக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த காரியங்கள் இறையருளால் எளிதாக நிறைவேறும். பொருளாதாரத்தில் நெருக்கடி நிலை இல்லை என்றாலும், வரவு தாமதமாக வரும்; செலவு சீக்கிரமாக வரும். மொத்தத்தில் வரவும் செலவும் சமமாக அமையும். சேமிப்புக்கு இடமிராது. பொதுவாக 2-ல் கேது இருந்தால் செலவுதான்; சேமிப்பு ஏற்படாது. ஆனால் இரண்டுக்குடைய சுக்கிரன் ஆட்சி, சேர்க்கை என்பதால் பணம் தட்டுப்பாடு இல்லாமல் வரும். பிள்ளைகள் வகையில் நல்லது நடக்கும். மகிழ்ச்சியும் திருப்தியும் நிலவும். 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்பது போல குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பிரியமானவர்களுக்காக விட்டுக்கொடுத்து நடப்பீர்கள். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போக மாட்டார் என்பது விதி! குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் திருப்தியளிக்கும். 8-ல் உள்ள ராகு அறிந்தவர், தெரிந்தவர், நெருங்கியவர்களின் வகையில் கவலையை உண்டாக்கலாம். வடக்குப் பார்த்த அம்மனை வழிபடுவது நல்லது. உத்தியோகம், தொழில் துறையில் வழக்கம்போல் நன்மைகள் நடக்கும். கேடு கெடுதிக்கு இடமில்லை. தொழில் மேன்மையும் லாபமும் எதிர்பார்க்கலாம்.
ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி 7, 12-க்குடைய செவ்வாய் சாரம். செவ்வாய்- சூரியன் பரிவர்த்தனை. செல்வாக்கு, மதிப்பு, மரியாதை ஆகியவற்றுக்கு குறைவில்லை. 2-க்குடைய புதன் 11-ல் நீசபங்கம். குடும்பத் தேவைகளையும் வருமானத்தையும் பெருக்க வேண்டிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்; வெற்றியும் அடைவீர்கள். அக்கம்பக்க வீட்டாரின் அன்புத் தொல்லைகள் கொஞ்சம் கூடுதலாகத் தெரியும். என்றாலும் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள். சில நேரம் நட்பால் நன்மை ஏற்படலாம். சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்ற பாலிஸியைக் கடைப்பிடித்து செயல்படுவீர்கள். அது பலன் தரும்; வீண் போகாது. எதிர்பார்த்த வேலைகளை இனிதாகவும் முடிக்கலாம். எளிதாகவும் முடிக்கலாம். 2-ஆம் இடத்தை யோகாதிபதியான சனி வக்ரமாக நின்று பார்ப்பதாலும், புதன் அஸ்தமனம் என்பதாலும் குடும்பத் தேவைகளை நிறைவேற்ற கடுமையான அலைச்சல்களைச் சந்திக்க நேரும். என்றாலும் விடாமுயற்சி வெற்றி தரும். அனைவரையும் திருப்திப்படுத்தலாம். உங்களோடு பழகும் நண்பர்களின் பலம்- பலவீனம் ஆகியவற்றை அறிந்து காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் எல்லாரிடமும் எல்லா ரகசியங்களையும் வெளியிடாமல் பக்குவமாக நடந்துகொள்வதும் நல்லது. விலகி நின்ற சிலர் விரும்பி வருவார்கள். ஏற்றுக்கொள்வது உங்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தும். ராசியில் கேது, 7-ல் ராகு- திருமணத் தடை, தாமதங்களை உருவாக்கலாம். 7-க்கு செவ்வாய், சனி பார்வை. சிலருக்கு காதல் திருமணம், கலப்புத் திருமணம் ஏற்பட இடமுண்டு. ஆண்களானால் கந்தர்வராஜ ஹோமமும், பெண்களாக இருந்தால் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து அபிஷேகம் செய்து கொள்ளலாம்.
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் 10-ல் நீசம் என்றாலும் கேந்திரம் என்பதால் நீசபங்கம் அடைவார். வாரக்கடைசியில் அஸ்தமனமும் அடைவார். புதிய முயற்சிகளும் தொழில் திட்டங்களும் தாமதமான பலனை ஏற்படுத்தினாலும், 11-ஆம் இடத்து குருவும், செவ்வாய்- சூரியன் பரிவர்த்தனையும் முடிவில் எதிர்பார்த்த வெற்றியைத் தந்துவிடும். பழகியவர்கள் அல்லது நண்பர்கள் பண உதவி கேட்டு அன்புத் தொல்லை செய்வார்கள். சிலரைப் புறக்கணித்தாலும் சிலரை தவிர்க்க முடியாத நிலையில் செயல்படுத்தலாம். 4-ல் உள்ள சனி, தாயார் வகையில் அலைச்சல் அல்லது மன உளைச்சல் ஏற்படுத்துவார். சிலருக்கு ஆரோக்கியம், சுகம் பாதிக்கப்படலாம். தொழில், வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்று செயல்பட்டு லாபமும் நன்மையும் அடையலாம். உத்தியோகத்திலும் 'கொள்ளுக்காக வாய் திறக்கும் குதிரை, கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்வதுபோல' பட்டும் படாமலும் பாலீஷாக நடந்து கொள்வீர்கள். சில வேலைச்சுமைகளை பக்கத்து நபர்களிடம் ஒப்படைத்து நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளித்து முன்னேறுவீர்கள்; சாதிப்பீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றலாம். ஆடம்பர அத்தியாவசியப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். சொந்தம் சுற்றத்தாரின் பொறாமையும் கண் திருஷ்டியும் சிலசமயம் உங்களைத் தாக்கலாம். கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்ப முடியாதல்லவா! ஹித திருஷ்டி அஹித திருஷ்டி பர திருஷ்டி ஸர்ப்ப திருஷ்டி விஷ நேத்ர திருஷ்டி நாசய நாசய' என்று திருஷ்டி சுற்றிப் போடவும்.
கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 11-ல் சுக்கிரனும் கேதுவும், 2-ல் செவ்வாயும், 10-ல் சூரியனும் குருவும் இருப்பதோடு சூரியனும் செவ்வாயும் பரிவர்த்தனை. எனவே உங்கள் கடமை காரியங்கள் தடையில்லாமல் நிறைவேறும். சில காரியங்களில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றியும் நன்மையும் உண்டாகும். உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சுயதொழில் புரிகிறவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் லாபமும் நன்மைகளும் பெருகும். புதிய ஒப்பந்தங்கள், காண்ட்ராக்ட் வேலைகள் அமையும். அலைச்சலும் திரிச்சலும் அதிகமாகக் காணப்பட்டாலும் முடிவில் லாபமும் நன்மையும் உண்டாகும். சில காரியங்களை நிறைவேற்ற மூன்றாவது மனிதர் உதவியும் ஆதரவும் எதிர்பார்த்தபடி அமையும். காலம் கடந்த விஷயங்களை அல்லது காரியங்களை செயல்படுத்தலாம். உறவினர்கள் வகையில் சுபகாரியங்களுக்காக உங்கள் சொந்தக் காசை செலவிட்டு நிறைவேற்றுவீர்கள். அவர்களின் பாராட்டையோ பலனையோ எதிர்பார்க்க மாட்டீர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைப்பிடீப்பீர்கள். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சிலருக்கு வேலைப்பளு காரணமாக சரியான சமயத்தில் சாப்பிட முடியாமல், அகால போஜனத்தால் அஜீரணத் தொந்தரவு தொல்லை தரலாம். அதற்கு இடம் தராமல் நடந்துகொள்வது நல்லது. நீண்டநாள் பழக்கமான பழையவர்களை எதிர்பாராமல் சந்தித்து மகிழலாம். அவர்களோடு விருந்து, கேளிக்கையில் கலந்துகொள்ளலாம்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியனும் 9-க்குடைய செவ்வாயும் பரிவர்த்தனை. சூரியனுடன் குடியிருக்கும் குரு ஜென்ம ராசியையும் செவ்வாயையும் பார்க்கிறார். உங்கள் தொழில் துறைக்கு தூரத்து மனிதர்கள் சிலரின் துணையும் ஆதரவும் உதவியும் அமையும். சிலர் அயல்நாட்டுப் பயண வாய்ப்புகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் திருமணம், சடங்கு போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் இடம்பெறும். புது ஆடை, அணிகலன் வசதிகள் சேர்க்கையாகும். குடும்பத்தாருடன் அல்லது அன்யோன்னியமானவர்களுடன் தெய்வ ஸ்தலங்கள் சென்று வழிபாடு செய்வதும், பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதுமான நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பழைய நண்பர்களைச் சந்தித்து அளவளாவி ஆனந்தப்படலாம். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகலாம். வழக்கு விவகாரங்களில் காலதாமதமும் சந்தேகங்களும் ஏற்படலாம். தவிர்க்க முடியாத பயணங்களால் சிலசமயம் உடல்நலக் குறைவும் வைத்தியச் சிகிச்சையும் உண்டாகலாம். இரண்டாமிடத்துச் சனி வக்ரமாக இருப்பதோடு 2-க்குடைய புதனும் 8-ல் நீசம் என்பதால், சொன்னதைக் காப்பாற்ற முடியாத சோதனைகள் உருவாகலாம். வாக்கு நாணயத்துக்கும் இடையூறு ஏற்படலாம். சிலர் கொள்கைப் பிடிப்பு இல்லாமல் மாறி மாறிப் பேசுவதும் செயல்படுவதுமான சூழ்நிலைக்கு ஆளாவார்கள். 4-ஆம் இடத்துக்கு செவ்வாய், சனி, ராகு- கேது சம்பந்தம் இருப்பதால், வசதி படைத்தவர்களுக்கு ஆரோக்கியக் குறைவு அல்லது ராஜவைத்தியச் சிகிச்சையும்; வசதியில்லாதோருக்கு கடன் அல்லது குடியிருப்பு மாற்றமும் ஏற்படலாம்.
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் நீச ராசியில் நின்றபோதும், கேந்திர ராசி (7-ல்) என்பதால் நீசபங்கம். 5, 6-க்குடைய சனி ஜென்ம ராசியில் வக்ரம்! 3-ஆம் இடத்துக்கு செவ்வாய், சனி பார்வை ராகு- கேது சம்பந்தம். எந்த ஒரு சிறு காரியமானாலும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப்போல கடினமாகத்தான் காணப்படும். 7-க்குடைய குரு 8-ல் மறைவு. அவருடன் 12-க்குடைய சூரியன் சேர்க்கை. குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, உடன்பாடில்லாத நிலை நீடிக்கும். அற்ப விஷயங்களைப் பெரிதாக்கிப் பிளவை உண்டாக்கும். தசாபுக்திகள் மோசமாக இருந்தால் பிரிவும் ஏற்படலாம். குறிப்பாக ஜென்மச் சனிக்காலம், சந்திர தசாபுக்தி சந்திப்பு இருந்தால் உயிர்ச் சேதம், பொருள் சேதம் ஏற்பட இடமுண்டு. சிவன் கோவிலில் ருத்ர ஹோமம் வளர்த்து ருத்ராபிஷேகம் செய்வது உத்தமம். தொடர்ந்து திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்வதும் உத்தமம். அதனால் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தப்பிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ அல்லது தனக்கோ மேற்கண்ட துர்ப்பலன்கள் ஏற்படலாம். அன்னிய இனத்து- குறிப்பாக முஸ்லிம் இனத்து நண்பர்களால் சில உதவிகள் கிடைக்கப் பெறும். புதிய தொழில் திட்டங்கள் நிறைவேற அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கலாம். சிலர் கடல் கடந்த பயணங்களைச் சந்தித்தாலும் அதனால் ஆரம்பத்தில் எந்த ஆதாயமும் ஏற்படாவிட்டாலும் பின்னால் நன்மையும் பயனும் உண்டாகும். விடாமுயற்சி வெற்றியளிக்கும். 6-க்குடையவர் சனி 2-ல் வக்ரம். சிலருக்கு ஆரோக்கியம் பாதிக்கலாம். சிலருக்கு தாயாதி வகை அல்லது பங்காளி வகை பகை ஏற்பட இடமுண்டு. அல்லது கடன் தொல்லை அதிகமாகலாம். திருச்சேறை சென்று சாரபரமேஸ்வரரையும், திருச்சி அல்லது தன்வந்திரி பீடம் சென்று தன்வந்திரி பகவானையும் வழிபடலாம்.
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைவு பெற்றாலும் ஆட்சியாக இருப்பதால் தோஷமில்லை. அதேபோல மேஷ ராசிக்கு செவ்வாய் 8-ல் விருச்சிகத்தில் மறைந்தாலும் அது ஆட்சி வீடு என்பதால் தோஷமில்லை. ஆனால் ராசிநாதன் சுக்கிரன் கேதுவுடன் சேர்க்கை- ராகு பார்வை என்பதால் கொஞ்சம் தோஷம் உண்டு. இதற்குப் பெயர் சகவாச தோஷம் எனப்படும். 'கெட்டானைத் தொட்டாலும் கெட்டான்' என்பதுபோல, கெட்டவர்களோடு சேர்ந்தவர்களும் கெட்டுப் போவார்கள். ஆனால் நல்லவர்களோடு சேர்ந்த கெட்டவர்கள் நல்லவர்களாகி விடுவார்கள். அதாவது தேன் தானும் கெடாது; தன்னோடு சேர்ந்த பொருட்களையும் கெட விடாது. அதிலும் ஒரு திருத்தம்- சபலமுள்ள நல்லவர்களும் கெட்டவர்களோடு சேர்ந்தால் கெட்டுப் போவார்கள். அது மாதிரி கெட்ட கிரகம் வலுப்பெற்று நல்ல கிரகம் பலமிழந்தால் நல்ல கிரகம் பலன் செய்யாது. இங்கு கேதுவை விட சுக்கிரன் ஆட்சி என்பதால் லக்னாதிபத்யம் (ராசியாதிபத்யம்) கெடாது. செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, செயல்பாடு எல்லாம் வலுவாக அமையும். கேது சேர்ந்திருப்பதால் சில தேவையற்ற விமர்சனங்களும் தவறான நோக்கும் ஏற்பட இடமுண்டு. குறுக்கீடுகளும் உண்டாகும். நீங்கள் சொல்லும் கருத்தை திரித்துச் சொல்லி உங்களுக்கு கெட்ட பேர் எடுக்கச் செய்யும். 12-ல் சனி- விரயச் சனி, வீண் அலைச்சல்களும் விரயங்களும் உண்டாகும். நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்த பணம் திரும்ப வராது. கொடுத்த பணத்தை திரும்பக் கேட்பதால் சிலசமயம் வருத்தமும் பகையும் ஏற்படலாம். இதற்கு- கொடுத்து கெட்ட பேர் எடுப்பதைவிட கொடுக்காமலேயே கெட்ட பெயர் எடுப்பது நல்லதுதானே! 7-ல் குரு இருந்து ராசியைப் பார்ப்பதால் திருமணத் தடை விலகும். 2-ல் ராகு நின்றாலும் அந்த வீட்டுக்குடைய செவ்வாய் பார்ப்பதால், பொருளாதாரத்தில் தேவைகள் நிறைவேறினாலும் சனி பார்ப்பதால் பண நெருக்கடி இருக்கத்தான் செய்யும். சிலர் தொழில் துறையில் தொய்வு பெற்று ஓய்வு நிலைக்குத் தள்ளப்படலாம். அப்படிப்பட்டவர்கள் லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ல் பலம் பெறுகிறார். சிம்மம் செவ்வாய்க்கு நட்பு வீடு. அத்துடன் செவ்வாயும் சூரியனும் பரிவர்த்தனை. அதில் சூரியன் உச்சம். மேலும் குருவும் சேர்க்கை. எனவே சூரியனுக்கு மறைவு தோஷம் விலகுகிறது. அரசு அதிகாரிகள் பதவியில் இருந்து கட்டாய ஓய்வு கொடுப்பது அல்லது விலக்குவது என்பது ஒன்று. (அது டெர்மினேட்). தற்காலிக பதவி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்வது என்பது ஒன்று. சஸ்பெண்ட் காலத்தில் அரைச் சம்பளம் உண்டு. விலக்கல் என்றால் சம்பளமே இல்லாத நிலை. ஒரு கிரகம் மறைவு பெற்றால் வேலையிலிருந்து விலக்குவதற்கு சமம். ஆனால் அந்த கிரகம் ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை பெற்றால் சஸ்பெண்ட் பீரியட் மாதிரி. ஆகவே சூரியனும் குருவும் 6-ல் மறைந்தாலும் முழு தோஷமில்லை. ஜென்மத்தில் ராகு; 7-ல் சுக்கிரன், கேது. களஸ்திர காரகன் சுக்கிரன் 7-ல் இருப்பது களஸ்திர தோஷம். அதேபோல 7-ல் ராகு- கேது சம்பந்தம் ஏற்படுவது நாக தோஷம். எனவே இந்த ராசியில் பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் தாமதப்படும்; தடைப்படும். ஜென்ம ராசிக்கு செவ்வாய், சனி பார்வை இருப்பதால் சிலர் கலப்புத் திருமணம், காதல் திருமணம் செய்ய நேரும். குருவும் ராசிக்கும் மறைகிறார். 7-ஆம் இடத்திற்கும் மறைகிறார். அப்படிப்பட்ட பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும் செய்து அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். முறைகேடாகக் காதலிப்பவர்கள் காமோகர்ஷண ஹோமம் செய்து கொள்ளலாம். 8, 11-க்குடையவர் புதன் 5-ல் நீசபங்கம் பெறுகிறார். அவரை ராசிநாதன் செவ்வாயும் 11-ல் நிற்கும் சனியும் பார்ப்பதால், ஜாதகப்படி அதிர்ஷ்ட யோகம் இருந்தால் எதிர்பாராத தனப்ராப்தி உண்டாகும். சொர்ணாகர்ஷண பைரவ ஹோமம் செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 5-ல் பலம் பெறுகிறார். அவரோடு சேர்ந்த சூரியன் 9-க்குடையவராகி உச்சம் பெறுகிறார். 5-க்குடைய செவ்வாயும் 9-க்குடைய சூரியனும் பரிவர்த்தனை யோகம். அவர்கள் இருவருக்கும் குரு சம்பந்தம். 1, 5, 9 என்ற திரிகோணாதிபதிகளின் சம்பந்தம் ஏற்படுவதால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். ஜாதக தசாபுக்தி யோகமாக அமைந்தால் இந்தக் கோட்சாரம் - குடிசையில் பிறந்தவர்களையும் கோபுரத்தில் ஏற்றி அமர்த்தி வைக்கும். புகழும் கீர்த்தியும் உண்டாகும். செல்வமும் செழிப்பும் ஏற்படும். வசதிவாய்ப்பும் தேடி வரும். 7, 10-க்குடைய புதன் நீச ராசியில் நீச பங்கம் பெறுவதால் திருமணத் தடை விலகும். சனி வக்ரமாக இருந்து 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், வக்ரத்தில் உக்ரபலம் என்ற கணக்குப்படி நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி அமைவார். திருமணத் தடை உள்ளவர்கள் சனிக்கிழமை ஆஞ்சனேயருக்கு அபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி பூஜை செய்யவும். சனி தசாபுக்திகள் நடந்தால் காலபைரவருக்கும் அபிஷேகம் செய்து தயிர்சாதம் நிவேதனம் பண்ணலாம். 10-ல் உள்ள சனி ஆரம்பத்தில் சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு மந்த நிலையை ஏற்படுத்தினாலும், பிறகு முன்னேற்றமும் விறுவிறுப்பும் ஏற்பட்டு லாபம் பார்க்கலாம். உத்தியோகத் துறையில் இருப்பவர்களுக்கும் ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும் போகப்போக உற்சாகமும் மனத் திருப்தியும் உண்டாகும். அலைச்சல் ஏற்படலாம்.
மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி வக்ரமாக இருக்கிறார். சித்திரை 2-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சனி புதன் வீட்டில்; புதன் குரு வீட்டில்; குரு செவ்வாயின் வீட்டில்; செவ்வாய் சூரியன் வீட்டில். சூரியனும் செவ்வாயும் பரிவர்த்தனை. அத்துடன் புதனுக்கு செவ்வாயின் பார்வை. எனவே இக்காலம் செயல்வேகம், மனோவேகம், தெளிவான சிந்தனை, எதிர்கால நம்பிக்கை, தீர்க்கமான முடிவு, முன்வைத்த காலை பின் வைக்காத துணிவு, கொள்கையில் உறுதிப்பாடு, லட்சியம் இவற்றோடு வாழ்க்கையில் செயற்கரிய செயல்களைச் செய்து பேரும் பெருமையும் அடைவீர்கள். புதிய தொழில் முயற்சிகளிலும் சம்பாத்தியத்திலும் ஆர்வமும் அக்கறையும் காட்டுவீர்கள். சிலர் கூட்டு முயற்சியில் ரியல் எஸ்டேட், டிரான்ஸ்போர்ட், ஷேர் மார்க்கெட்டிங் போன்ற தொழில்களில் ஈடுபடலாம். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். சிலருக்கு வெளியூர் பயணங்கள், கடல் கடந்த பயணங்கள் ஏற்பட இடமுண்டு. அதனால் ஆதாயமும் அனுகூலமும் உண்டு. உறவினர்கள் வகையில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. உதவிகள் கேட்டு வருவார்கள். செய்து கொடுத்தால் சந்தோஷம்; செய்ய முடியாவிட்டால் வருத்தம் என்ற நிலை ஏற்படும். அதை நீங்கள் பெரிதுப்படுத்த வேண்டாம். யாருக்கு எது ப்ராப்தமோ அது அவர்களுக்கு நடக்கும். 9-ல் சனியும் அவருக்கு 8-ல் சூரியனும் இருப்பதால், சிலருக்கு பித்ரு தோஷம் ஏற்பட இடமுண்டு. அவர்கள் தேவிபட்டினம் சென்று பரிகாரம் செய்துகொள்ளவும்.
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 8-ல் மறைவது குற்றம் என்றாலும், புதன் வீட்டில் சனி நிற்கிறார். குரு வீட்டில் புதன் நிற்கிறார். செவ்வாய் வீட்டில் குரு நிற்கிறார். சூரியன் உச்சம் பெற்று செவ்வாய் வீட்டில் குருவோடு சம்பந்தப்படுகிறார். இது உங்களுக்கு எதிர்பாராத யோகங்களை ஏற்படுத்தக் கூடும். விபரீத ராஜயோகம் என்றுகூட சொல்லலாம். வருமானத் தடை, தொழில் தடை, குடும்பக் குழப்பம், கடன் கவலை, உற்றார்- உறவினர்களின் ஆதரவற்ற நிலை ஆகிய எல்லா தோஷங்களையும் இக்கால கட்டம் நிவர்த்தி செய்து புதுமையான எதிர்காலத்தை உதயமாக்கும். தனக்கென்று ஒரு தொழிலோ வருமானமோ இல்லாத நிலையில், கடந்த பல வருடங்களாக சத்திரத்தில் சாப்பாடு- சாவடியில் படுக்கை என்று வாழ்நாளை வீண்நாளாக ஓட்டியவர்களுக்கும், துடுப்பில்லாத படகுபோல வாழ்க்கைப் பயணத்தை ஓட்டியவர்களுக்கும் தற்போதைய கோட்சாரம் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்தும். முக்கியமான வி.ஐ.பி.களின் தொடர்பு கிடைக்கும். அவர்களுடைய காரியங்களைப் பொறுப்பேற்று செயல்படுத்துவீர்கள். முடியாமல் தேங்கிக் கிடக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். அதனால் அவர்களுடைய அபிமானமும் ஆதரவும் கிடைக்கப் பெறும். அது உங்களுடைய எதிர்கால இனிய வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமைந்துவிடும்.
மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 2-ல் பலம் பெறுகிறார். அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் சூரியன் வீட்டில். சூரியனோ செவ்வாய் வீட்டில். இங்கு சூரியனும் செவ்வாயும் பரிவர்த்தனை. இது 6, 2-க்குடைய பரிவர்த்தனை. இவர்களோடு குரு சம்பந்தமிருப்பதாலும் குரு 1, 10-க்குடையவர் 3, 8-க்குடைய சுக்கிரன் சாரம் என்பதாலும் ஓரளவு விபரீத ராஜயோகம் உண்டாகலாம். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாகும். ஆனால் எதிர்பாராத காரியங்கள் நிறைவேறி நெஞ்சுக்கு ஆறுதல் அளிக்கும். 4, 7-க்குடைய புதன் ஜென்ம ராசியில் நீசபங்கமாக இருப்பதோடு அஸ்தமனமும் அடைவார். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதுபோல, எதிர்பாராத யோகம் உண்டாகும். 2-க்குடைய செவ்வாய் 6-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் தன ப்ராப்தி யோகம். அன்னியர் தனம் உங்களிடம் புரளும். வெளிவட்டார மனிதர்கள் உங்கள் தொழிலுக்கு ஆதரவாகவும் அனுகூலமாகவும் செயல்பட்டு உங்களுக்கு பக்கத்துணையாக விளங்குவார்கள். புதிய திட்டங்கள் செயல்படும். புதிய முயற்சிகள் கைகூடும். 7-ல் உள்ள சனி 9-ஆம் இடம், ஜென்ம ராசி, 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தெய்வானுகூலமும் முன்னோர்கள் ஆசியும் குலதெய்வ கிருபையும் உங்களை வழிநடத்தும். அதனால் குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். தொழில், பொருளாதாரம் இரண்டிலும் நீங்கள் விரும்பியவண்ணம் செயல்படும். மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு தேக சுகத்தில் கவனம் தேவைப்படும். 6-ல் உள்ள செவ்வாய் போட்டி, பொறாமை, கடன், வைத்தியச் செலவு போன்ற 6-ஆம் இடத்துக் கெடுதல்களை விரட்டியடிப்பார். துன்பங்களைத் துரத்தியடிப்பார். உங்களைப் பிடிக்காதவர்களும் உங்களை விரோதிகளாக நினைத்து வேதனை கொடுத்தவர்களும் இனிமேல் காணாமல் போய்விடுவர். அதனால் ஹைவேஸ் ரோட்டில் நாலு வழிப்பாதையில் தடை இல்லாத வேகத்தோடு உங்கள் பயணம் தொடரும்! சாதனை படரும்!