பல கோமாளிகள் சேர்ந்து கூத்து நடத்துவதைப் பார்த்திருக்கிறீர்களா ? அது நமது நாட்டில்தான் நடந்து வருகிறது. இந்தக் கூத்தில் பங்கேற்பவர்கள், சிபிஐ அதிகாரிகள், அரசியல்வாதிகள், மாநில ஆளுனர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர். அரசியல்வாதிகளில் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
இந்த கூத்தின் முக்கிய கதாப்பாத்திரம் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயவதி. தாஜ் மஹால். இந்தத் தாஜ்மஹாலைப் பார்த்து காதலில் விழாதவர்கள் இருக்கவே முடியாது. மாயாவதி உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, 17ம் நூற்றாண்டின் சிறப்பான கலைப்பொக்கிஷமான தாஜ்மஹாலின் பொலிவைக் கெடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டார்.
மல்டி ப்ளெக்சுகள், உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா உள்ளிட்டவற்றை யமுனை நதிக்கரையில் கட்ட அனுமதி அளித்தார் மாயாவதி. நாடெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. யுனெஸ்கோ அமைப்பு, தாஜ் மஹாலை பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்திலிருந்து நீக்கி விடுவதாக எச்சரிக்கை விடுத்தது. புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் மத்திய அரசு அமைப்புகள், சுற்றுச் சூழல் துறை ஆகிய எந்தத் துறையிலும் அனுமதி பெறவில்லை மாயாவதி.
தாஜ் காரிடார் என்ற அந்தத் திட்டம், தாஜ் மஹால் மற்றும் ஆக்ரா கோட்டையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுலா செல்லும் பயணிகள், தாஜ் மஹால் முதல் ஆக்ரா கோட்டை வரை எளிதாகச் சென்று வருவதற்காகவே இத்திட்டம் என்று உத்தரப்பிரதேச அரசால் அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 2002ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக உத்தரப் பிரதேச அரசு 175 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்தை செயல்படுத்தவதற்கு எந்தவிதமான டெண்டரும் வழங்காமல், நேஷனல் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் என்ற மத்திய அரசு நிறுவனத்துக்கு இட்டெண்டரை வழங்கியது. அந்த நிறுவனம் எவ்வித டெண்டரும் வெளியிடாமல், இஷ்வாக்கூ என்ற நிறுவனத்துக்கு இந்த வேலையை வழங்கியது. உத்தரப்பிரதேச அரசு இத்திட்டத்திற்கு 17 கோடி ரூபாயை முன்பணமாக வழங்கியது.
யமுனை நதிப்படுகையை நிரப்பும் பணியும், நதியோரமாக சுற்றுச் சுவர் கட்டும் பணியும் தொடங்கியது. 2 கிலோ மீட்டர் வரை மண் நிரப்பப்பட்டு, 1500 மீட்டர் நீளத்துக்கு சுற்றுச் சுவரும் கட்டப்பட்டது. அப்போது மத்திய கலாச்சார அமைச்சராக இருந்த ஜக்மோகன் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, கட்டுமானப் பணியை நிறுத்துமாறு மாயாவதியை கேட்டுக் கொண்டார்.
இந்தத் திட்டத்தை ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில் என்பிசிசி தரப்பும் இடம் பெற்று, வரப்போகும் திட்டம் எந்த வகையிலும் சுற்றுச் சூழலை பாதிக்காது என்று தெரிவித்தது. யமுனை நதியின் கரையினில், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று என்பிசிசி தெரிவித்தது.
உலகத்தின் புராதானச் சின்னமான தாஜ் மஹாலைஹயம், மற்ற புராதானச் சின்னங்களையும் இணைக்கும் இத்திட்டத்திற்கு, இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் அனுமதியையும் பெறவில்லை, சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் தடையில்லா சான்று பெறவில்லை.
இறுதியாக, நிபுணர் குழு அனைத்து நிபுணர்களையும் வைத்து, முழுமையான ஆய்வு மேற்கொண்ட பிறகே இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும், அது வரை கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறுத்த வேண்டும் எனவும் அக்குழு தெரிவித்தது.
ஆனால், எதற்கும் கவலைப்படாமல், மாயாவதி கட்டுமானப்பணிகளை ஒர வினாடி கூட நிறுத்தவில்லை. மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜக்மோகன், இது தொடர்பாக மாயாவதிக்கு நீண்ட கடிதத்தை எழுதி, புராதான மற்றும் பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் 1958ன் படி இது தவறு மற்றும் சட்டவிரோதம் எனவும் தெரிவித்திருந்தார். இச்சட்டத்தின் படி புராதானச் சின்னம் அமைந்துள்ள 300 மீட்டருக்குள் எவ்வித கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்பதை அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டினார். இப்படி சட்டவிரோதமாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை, முதலமைச்சர் என்ற முறையில் தடுக்க வேண்டியது அவர் கடமை எனவும், அக்கடிதத்தில் ஜக்மோகன் தெரிவித்தார்.
இதையடுத்து வேலையை நடைபெறுவதை நிறுத்தி உத்தரவிட்ட மாயாவதி, தனக்கு இது போல ஒரு திட்டம் நடைபெறுவதே தெரியாது எனவும், இதற்குக் காரணமான அதிகாரிகளை தண்டிப்பேன் எனவும் தெரிவித்தார். ஆனால் ஒரு முதலமைச்சருக்கு தெரியாமல் 175 கோடி மதிப்பிலான திட்டத்தை எந்த அதிகாரியாவது செயல்படுத்துவாரா என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால் மாயாவதியோ, இத்திட்டத்திற்கு காரணமானவர் என்று சுற்றுச் சூழல் செயலாளரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதன் நடுவே இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் ஆக்ரா கோட்டைக்கு 300 மீட்டருக்கு உள் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகவும், இதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறும் கேட்டு, ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் கொடுக்கிறார். ஆனால் எந்த எப்ஐஆரும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தாஜ் காரிடார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு தொடரப்படுகிறது.
அந்த வழக்கில் 16.07.2003 அன்று உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், தாஜ் காரிடார் தொடர்பாக ஒரு விசாரணையை நடத்தி நான்கு வாரங்களுக்குள் முதல் கட்ட அறிக்கையும், இரண்டு மாதங்களுக்குள் இறுதி அறிக்கையும் தரவேண்டும் என உத்தரவிட்டது. பூர்வாங்க விசாரணையை தொடங்கிய சிபிஐ, ஆகஸ்ட் 2003ல் அன்று தனது விசாரணை அறிக்கையை அளிக்கிறது. 21.08.2003 அன்று அந்த அறிக்கையின் அடிப்படையில் சில உத்தரவுகளை பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம். இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நான்கு உயர் அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த ஊழலில் 17 கோடி ரூபாய் மாயமாகப் போயிருக்கும் காரணத்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துகள் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
மீண்டும் இவ்வழக்கு 18.09.2003 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகையில், பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
After going through the report of the CBI submitted on 11.09.2003, further time was given to the CBI for verification of the assets of the persons/officers involved. In the course of hearing, the CBI has pointed out that income tax returns of various persons including the petitioner were collected from different income tax authorities. In the course of the said proceedings, apart from various reports with regard to the assets, the learned ASG - Mr. Altaf Ahmed submitted that further inquiry/investigation is necessary by the CBI.
Based on his request, this Court issued the following directions:
சிபிஐ தாக்கல் செய்த 11.09.2003 நாளிட்ட அறிக்கையை பரிசீலித்ததில் பல்வேறு நபர்கள் மற்றும் அதிகாரிகளின் சொத்துக்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது, வருமான வரித்துறையிலிருந்து சில ஆவணங்கள் வரவேண்டியுள்ளன. சொத்துக்கள் குறித்து மேலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டியுள்ளளது என்று மத்திய அரசு வழக்கறிஞர் அல்தாப் அஹமது குறிப்பிட்டிருக்கிறார். அவரின் கோரிக்கையின் அடிப்படையில் கீழ்கண்ட உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம்.
உத்தரப்பிரதேச அரசு, அந்த மாநிலத்தின் நான்கு அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பிசிசி மேலாண்மை இயக்குநர் மீது விசாரணை நடத்த வேண்டும், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்யலாம், இதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, விசாரணை நடத்த வேண்டும்.
சிபிஐ உத்தரப் பிரதேச முதலமைச்சர் மாயாவதி, அந்த அரசின் சுற்றுச் சூழல் அமைச்சர் நசிம்முதீன் சித்திக்கி, மற்றும் உள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும், வருமான வரித்துறை சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், சிபிஐ வழக்கு பதிவு செய்கையில், இந்திய தண்டனைச் சட்டம், லஞ்ச ஒழிப்புச் சட்டம் மற்றும் இதர சட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
நான்கு மாதம் கழித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து 05.10.2003 அன்று சிபிஐ இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைத் தாக்கல் செய்கிறது. தாஜ் காரிடார் வழக்குக்கு ஒரு எப்ஐஆரும், மாயாவதி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு எப்ஐஆரும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மாயாவதி மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்கிறது சிபிஐ. மாயாவதி அலகாபாத் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுகிறார்.
உச்சநீதிமன்றத்தில், தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்கிறார் மாயாவதி. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் 2008ம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்த சிபிஐ, 1998ம் ஆண்டில் ஒரு கோடியாக இருந்த மாயாவதியின் சொத்து 2003ம் ஆண்டில் 50 கோடியாக உயர்ந்தது. அவர் தனது பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் 96 வீட்டு மனைகளையும், தோட்டங்களையும், பண்ணைகளையும், 1998-2003 ஆண்டு காலத்திற்குள் வாங்கியுள்ளார் என்று தெரிவித்தது சிபிஐ. சமீபத்தில் ராஜ்ய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாயாவதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ? அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் படியே 114 கோடி.
பத்து தலைமுறைகளுக்கும் மேலாக, கூலி வேலை செய்து, கல்வியறிவு இல்லாமலேயே வளர்ந்து, இன்று ஓரளவுக்கு அரசு உதவித் தொகைகளால், அன்றாட வாழ்வை சமாளித்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தலித்துகள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை ஒப்பிடுகையில் இந்த தலித் தொழிலதிபரின் திறமை அசாத்தியமானது.
சரி விஷயத்துக்கு வருவோம். இதற்கு நடுவே தாஜ் காரிடார் வழக்கில் விசாரணையை முடித்த சிபிஐ, மாயாவதி மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, உத்தரப்பிரதேச மாநில ஆளுனரிடம் 2007ம் ஆண்டு மனு தாக்கல் செய்கிறது. அப்பேது ஆளுனராக இருந்தவர் டி.வி.ராஜேஸ்வர். அவர் மாயாவதி மீது வழக்கு தொடர்வதற்கு போதுமான ஆதாரங்கள் கிடையாது, அதனால் அனுமதி தர முடியாது. அஸ்கு புஸ்கு என்று விட்டார். மாயாவதி உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர். மத்தியில் ஆளுவதோ ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. ஆளுனர் மத்திய அரசின் ஆளுகையின் கீழ் வருபவர். பிறகு ஏன் ஆளுனர் அனுமதி மறுக்க வேண்டும் ? ஏன் மறுக்கிறார் என்றால், அப்போது ஜனாதிபதி தேர்தல் நடந்தது. பிரதீபா பாட்டீலை ஜெயிக்க வைப்பதற்கு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஓட்டுக்கள் மிக அவசியம்.
இது மட்டுமின்றி, மாயாவதி ஆளுனரை நேராக அணுகியிருந்தாலே பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதியை மறுத்திருப்பார். டி.வி.ராஜேஸ்வர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.
தன் மீதுள்ள வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்தான் நேற்றைக்கு முன்தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாயாவதி எதன் அடிப்படையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்கிறார் என்றால், உச்ச நீதிமன்றம் தாஜ் காரிடார் ஊழல் தொடர்பாக எப்ஐஆர் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எப்ஐஆர் தாக்கல் செய்ய உத்தரவிடவில்லை. ஆகையால் சிபிஐ தாக்கல் செய்த இரண்டாவது எப்ஐஆர் தவறு என்பதே மாயாவதியின் நிலைப்பாடு.
தாஜ் காரிடார் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை FIR No. R.C. 0062003A0018 நாள் 05.10.2003 மாயாவதி மற்றும் 10 பேர் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
மாயாவதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் தகவல் அறிக்கை FIR No. R.C. 0062003A0019 dated 05.10.2003 under Section 13(2) read with Section 13(1)(e) of the P.C. Act.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் மாயாவதி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.
அந்தத் தீர்ப்பில், “அடிப்படை உரிமைகளைக் காக்கும் உச்சபட்ச அமைப்பான இந்நீதிமன்றம் மாயவதியின் 1995 முதல் 2003 வரையிலான சொத்துக்கள் குறித்து மனம்போன போக்கில் விசாரணை நடத்த உத்தரவிடவில்லை. தாஜ் காரிடார் திட்டமே ஜுலை 2002ல் தான் தொடங்கியுள்ளது, முன்பணமான 17 கோடி ரூபாயும் செப்டம்பர் 2002ல்தான் வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ கடைபிடித்துள்ள முறை தேவையற்றது மட்டுமல்ல, வரம்பு மீறியதுமாகும். நீதிமன்றம் பல்வறு நாட்களில் பிறப்பித்துள்ள ஆணைகளை சிபிஐ சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பது எங்களுக்குப் புரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக இரண்டாவது எப்ஐஆர் தாக்கல் செய்ய இந்நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்பதையும் நாங்கள் உணர்கிறோம்.
இந்த வழக்கே தாஜ் காரிடார் தொடர்பானது என்பதால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான ஆவணங்கள் இந்நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப் பட்டிருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யச் சொல்லி உத்தரவிடப்பட்டது என்ற கேள்வியே எழவில்லை.
18.09.2003 நாளிட்ட இந்நீதிமன்றத்தின் உத்தரவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக வழக்கு பதியச் சொல்லி குறிப்பிட்டு உத்தரவு ஏதும் பிறப்பிக்காத நிலையில், சிபிஐ இனியும் இவ்வழக்கை தொடர்வது சரியல்ல. இந்நிலையில் சிபிஐ தனது வரம்பை மீறியே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
மேற்கூறிய விவாதங்களின் அடிப்படையில், 18.09.2003 நாளிட்ட இந்நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பாக உத்தவு ஏதும் பிறப்பிக்கப்படாத காரணத்தாலும், சிபிஐ வரம்பு மீறி செயல்பட்டிருப்பதாலும் சிபிஐ பதிவு செய்த FIR No.R.C. 0062003A0019 dated 05.10.2003 ரத்து செய்கிறோம். அந்த எப்ஐஆர் வரம்பு மீறிப் பதிவு செய்யப்பட்டதால், அதன் மீது நடந்த புலனாய்வும் சட்டவிரோதமானது என்பதால் அதையும் ரத்து செய்கிறோம்.” என்று உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கு 2003ம் ஆண்டு முதல் தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட 18.09.2003 நாளிட்ட ஆணையை எடுத்துக் கொள்வோம்.
“13. Considering the aforesaid report and the serious irregularities/illegalities committed in carrying out the so-called Taj Heritage Corridor Project, we direct:
(f) for the officers and the persons involved in the matter, CBI is directed to lodge an FIR and make further investigation in accordance with law;
(g) CBI shall take appropriate steps for holding investigation against the Chief Minister Ms Mayawati and Naseemuddin Siddiqui, former Minister for Environment, U.P. and other officers involved;
முதல் பாயின்ட்டில் “இதில் சம்பந்தப்படடுள்ள அதிகாரிகள் மற்றும் நபர்களைப் பொறுத்தவரை, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, சட்டப் படி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.”
இரண்டாவது பாயிண்ட்டில் “முதலமைச்சர் மாயாவதி மற்றும் முன்னாள் சுற்றுச் சூழல் அமைச்சர் நசிமுத்தீன் சித்திக்கி மற்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக புலனாய்வை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”
முதல் உத்தரவு தாஜ் காரிடார் தொடர்பானது. அதில் “சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் நபர்கள்” என்ற வாக்கியம் உள்ளது. அதில் நபர்கள் என்ற வார்த்தைக்குள் மாயாவதி வருவாரா மாட்டாரா ? நபர்கள் எனறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட அனைவரையுமே, மாயாவதி உள்பட.
இரண்டாவது உத்தரவில் “முதலமைச்சர் மாயாவதி மற்றும் முன்னாள் சுற்றுச் சூழல் அமைச்சர் நசிமுத்தீன் சித்திக்கி” ஆகியோருக்கு எதிராக “புலனாய்வு” மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக “புலனாய்வு” என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. புலனாய்வு என்றாலே முதல் தகவல் அறிக்கைக்குப் பிறகுதான். இதில் தனியாக எப்ஐஆர் என்று ஏன் குறிப்பிட வேண்டும்.
சரி தவறுதலாகவே சிபிஐ எப்ஐஆர் தாக்கல் செய்து விட்டதாக ஒப்புக் கொண்டாலும் கூட, புலனாய்வில் கிடைத்த ஆதாரங்கள் ஒரு குற்றம் நடந்ததற்கான சான்றாக உள்ளதே. சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தின் முன்நின்று வழக்கை எதிர்கொள்வதுதானே சரியாக இருக்கும் ? 1998ல் ஒரு கோடியாக இருந்த ஒருவரது சொத்து 2003ல் 50 கோடியாக எப்படி உயர்ந்தது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிசீலித்திருக்க வேண்டாமா ?
மருத்துவமனையில் ஸ்ட்ரேச்சர் தள்ளும் நபர்கள், துப்புறவுப் பணியாளர்கள், போர்ட்டர்கள் ஆகியோர் கூடுதலாகப் பணம் கேட்பது ஊழல்… மாயாவதி செய்தது ஊழல் இல்லையா ?
ஒரு கொலை நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். குற்றவாளி கைது செய்யப்படுகிறார். கொலையைக் கண்ணால் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். அந்த வழக்கை ஒரு இன்ஸ்பெக்டர் விசாரித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கிறார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கையில், அந்த இன்ஸ்பெக்டர் போலி பட்டப்படிப்பு சான்றிதழை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார் என்பது தெரிய வந்து, அவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
இன்ஸ்பெக்டர் பணிக்கு தகுதியில்லாத ஒரு நபர் இந்த வழக்கை விசாரித்திருப்பதால், நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தும், ஆதாரங்கள் இருந்தும் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டுவிடலாமா ?
அது போலத்தானே இதுவும் ?
இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 19.07.2004 அன்று நடைபெற்றபோது, இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.
In addition to the above, he also pressed into service para 4 of the order dated 19.07.2004 – M.C. Mehta vs. Union of India and Others, (2007) 1 SCC
136. The said order reads as under: -
“4. CBI is permitted further eight weeks’ time to complete the investigation in respect of FIR No. RC 0062003A0018. As far as FIR No. RC 0062003A0019 is concerned, three months’ time is granted.”
அந்த உத்தரவில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், FIR No. RC 0062003A0018யில் புலனாய்வை முடிக்க 8 வார காலமும், RC 0062003A0019 3 மாத காலமும் அவகாசம் வழங்கப்படுகிறது என்பதே அந்த உத்தரவு.
ஆக, 2004 முதல் இரண்டு எப்ஐஆர்கள் உள்ளன.. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கும் சிபிஐயால் புலனாய்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது உச்ச நீதிமன்றத்துக்கு தெரிந்துதானே நடந்திருக்கிறது. 2004ல் வழக்குப் புலனாய்வுக்கு கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு 2012ல் அதே வழக்கின் எப்ஐஆர் சட்டவிரோதமாகத் தெரிகிறது.
ஏன் அப்படித் தெரிகிறது… ? ஏனென்றால் இதுதான் கோமாளிகளின் கூத்து. நாம் இந்த கூத்தை வேடிக்கைப் பார்ப்பவர்கள்.
இதில் தமிழர்களாகிய நாம் பெருமைப் பட ஒரு விஷயம் இருக்கிறது. ஆம் தோழர்களே, இந்தக் கூத்தில் முக்கியப் பங்கு வகித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஒரு தமிழர். ஆம் தோழர்களே.. அந்த நீதிபதி வேறு யாரும் அல்ல… நீதியரசர் சதாசிவம் அவர்களே….