Pages

Sunday, 15 July 2012

மஷ்ரூம் தம் பிரியாணி



 
  • அரிசி - 2 கப்
  • பட்டன் மஷ்ரூம்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
  • புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்
  • மல்லி இலை - கால் கப்
  • புதினா - கால் கப்
  • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • மல்லி தூள் - 4 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • மிளகு தூள் - 2 தேக்கரண்டி
  • சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
  • பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு, மராட்டி மொக்கு, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
  • பால் - 5 தேக்கரண்டி
  • சிகப்பு கலர் - சிறு துளிகள்
  • ரோஸ் வாட்டர் - சிறிதளவு


ஒரு பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் ஊற்றி வாசனை பொருட்களை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை சேர்த்து அதற்கேற்ற உப்பு சேர்த்து எட்டு முதல் பத்து நிமிடம் வரை வேகவிட்டு வடிக்கட்டி தனியே எடுத்து வைக்கவும்.
வெங்காயம், மஷ்ரூமை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். புதினா கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும். எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதங்கிய வெங்காயத்தில் சேர்க்கவும்.
இஞ்சி பூண்டு வாசம் போகும் வரை வதக்கிய பின்னர் எல்லா பொடி வகைகளை சேர்த்து வதக்கவும்.
பொடிகளின் பச்சை வாசம் அடங்கியதும் விழுதாக அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி ஓரளவுக்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள புதினா, மல்லி இலையில் பாதியை சேர்த்து வதக்கவும்.
பிறகு தயிரை நன்றாக கட்டியில்லாமல் அடித்துவிட்டு சேர்த்து கிளறவும்.
கலவையில் தயிர் நன்றாக கலந்ததும் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து இதற்கு தேவையான உப்பும் சேர்த்து கிளறவும். காளான் ஓரளவுக்கு வெந்ததும் கலவையை அடுப்பிலிருந்து இறக்கவும்.
வெதுவெதுப்பான பாலில் சிகப்பு கலரை கலந்து வைக்கவும். இப்பொழுது ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் முதலில் ஒரு லேயர் வடித்த சாதம், பிறகு மஷ்ரூம் கலவை, மேலே சிறிதளவு மல்லி மற்றும் புதினா இலை என்று மாறி மாறி சாதம் மற்றும் கலவை தீரும் வரை போடவும். கடைசி லேயர் கண்டிப்பாக அரிசியாக தான் இருத்தல் அவசியம். கடைசியில் கரைத்து வைத்துள்ள கலர் மற்றும் ரோஸ் வாட்டர் தெளித்து தம் போடவும்.
பத்து முதல் பதினைந்து நிமிடம் கழித்து திறந்து உடையாமல் கிளறி ரைத்தாவுடன் பரிமாறவும். சுவையான மஷ்ரூம் தம் பிரியாணி ரெடி.

அடுப்பில் தம் போடும் முறை:
பாத்திரத்தை சரியான மூடி கொண்டு மூடி அதன் ஓரத்தை சப்பாத்தி மாவு கொண்டு அடைத்து விடவும். அடுப்பில் தவாவை வைத்து தீயை மிதமாக குறைத்து அதன் மேல் இந்த பாத்திரத்தை வைக்கவும். நெருப்பு துண்டு கிடைத்தால் தட்டின் மேல் வைக்கலாம். இல்லையென்றால் ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை நிரப்பியும் வைக்கலாம். பத்து முதல் பதினைந்து நிமிடம் வரையிலாவது இருத்தல் அவசியம்.
அவனில் தம் போடும் முறை:
அவனை 400- 425 F முற்சூடு செய்து அவன் ஸேப் பாத்திரத்தில் லேயராக கொட்டி பத்து முதல் பதினைந்து நிமிடம் வரை வைத்தேடுக்கவும்.

0 comments:

Post a Comment