Pages

Monday, 2 July 2012

கவிதை


நீங்காத நினைவுகள்
ஓடி விளையாடிய இடங்கள்,
அமர்ந்து அடித்த அரட்டை,
பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும்,
ஆறாத அனுபவங்கள்.........!
சின்ன சின்ன சண்டைகள்,
ஆறிய காயங்கள்,
ஆறாத நினைவுகள்,
ஒவ்வொரு மரத்தின் அசைவும்,
சத்தமிட்ட குரலும்,
பாடிய பாடல்களும்,
ஆடிய நடனமும்,
உங்களை நினைவுபடுத்துகின்றன.......!
உங்கள் எச்சில் பட்டு அளித்த உணவு
இன்னும் செரிக்கவில்லை,
வகுப்பறையே தனி உலகமாய்,
நண்பர்களே உலக மக்களாய்,
மற்றவர்களை பற்றி சிந்தனை செய்யாத மனம்........!
இவை அனைத்தும் நீங்காத நினைவுகளாக,
மற்றவர்களிடம் கூறும் போது,
கண்ணோரம் தோன்றும் கங்கை நதி.......
நான் இறந்த பின்னும் இறக்காத என் இதயம்,
அதனுள் உங்கள் பிம்பங்கள்,
என்றும் என்றென்றும் நீங்காதவையாக........


கனா கண்டேன்
கவிக்கு பொய் வேண்டும்
என யார் சொன்னது
மெய்யாய் உன்னை நேசிக்கும் எனக்கு
கவியாய் உன்னை எழுத
பொய் ஒன்றும் தேவையாய் இல்லை
மெய்யாய் இருக்கும் எனதன்பை
கவியாய் எழுதினாலே
சுவையாய் கொட்டுமே அவ்வுணர்வு
வந்தாய் எனக்காக
பாலாய் பெருகியது எண்ணமெங்கும்
களைந்தாய் என் சோகம்
உணர்வாய் நீ வந்து, பூவாய்
எனை பார்க்கையிலே
தேனாய் மாறுமே என் மனது
பொழுதோடு பொழுதாய்
உயிராய் நான் இருக்க
துயில்வாய் நீ சேயாய்
தாயாய் நான் அரவணைக்கையிலே
கலந்தாய் என் சுவாசமாய்
அணைத்தாய் உன் கரங்களிலே
மெய் சிலிர்க்க வைத்தாய்
தாயென்னும் பெரும் பேரு தந்தாய்
புன்னகை பூத்தாய்
மயக்கினாய் உன் மழலையால்
சிரித்தாய் சிணுங்கினாய்
அழுதாய் பாடாய்படுத்தினாய்
வந்தாய் தளிராய் விரிந்தாய் மலராய்
மத்தாப்பாய் சிந்தினாய் குறுஞ்சிரிப்பை
மடிச் சூட்டில் மிதந்தாய்
சாயிந்தாய் என் தோள்களிலே
புன்முறுவலில் வருடினாய்
ஆக்கினேன் என்னை சமர்பணமாய்
அம்மாவென ஆசையாய் அழைத்து
இட்டாய் இப்பூலோகத்தை என் காலடியில்
பெருமையாய் நெகிழ்ந்தேன்
என் குட்டி பூவாய் நீ தவழ்கையிலே
எஜமானியாய் வலம் வந்தாய்
இரண்டாக்கினாய் இல்லத்தை
வினவினாய் பல கேள்விகளை
குழம்பினேன் விடை தெரியாதவளாய்
அதட்டினாய் கொஞ்சினாய்
சரணடைந்தேன் கைதியாய்
கத்தினாய் கதி கலங்க
சிறகடித்தாய் பிடிவாத பூங்காற்றாய்
செல்லமாய் கெஞ்சினாய்
ஜனித்தேன் ஒரு குழந்தையாய்
என் கை விடுத்து ஓடினாய்
சண்டித்தனம் செய்தாய்
தீண்டினாய் உன் விரல் அரும்பால்
பெருக்கெடுத்தேன் அருவியாய்
தொட்டிலில் உறங்க மறுத்தாய்
என் படுக்கையை ஆக்ரமித்தாய்
நித்திரையில் சிரித்தாய்
ரசித்தேன் தூக்கம் களைந்தவளாய்
கடவுளாய் காத்தாய் குட்டி
சாத்தானாகி ஆட்டியும் வைத்தாய்
வளர்ந்தாய் வளர்த்தினாய்
எனக்கே என்னை உணர்த்தினாய்
பலஜென்ம பலன் ஆனாய் தவமாய்
இருந்த எனக்கு வரமாய் வந்தாய்
உலகமே ஆனாய் மனதில்
பேரின்பம் சேர்த்தாய்
பிரபஞ்சமே நீயாய்
எல்லாமும் ஆனாய்
நான் விழி மூடும் வரை வருவாய்
தருவாய் உன் கலங்கமற்ற அன்பை
வார்த்தைகள் துணையாய் இல்லை
மேலும் உன்னை கவியாய் இயற்ற
ஏதோ என்னை தட்டி எழுப்ப
எழுந்தேன் சோர்வாய் என் நித்திரை அகல
பின் புரிந்தது என் அழகே
காலை கனவாய் நீ களைந்தாய் என்று

0 comments:

Post a Comment