Pages

Monday, 2 July 2012

குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?


இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.
என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.
Baby healthy foodகுழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.
குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.
பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.
திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.
குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.
வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.
குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.
Baby healthy foodபலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.
முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.
குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்
வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.
ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.
அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.
பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.
சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.
வேக வைத்து மசித்த காய்கறிகள்:
பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.
இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.
Baby healthy foodஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.
எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.
ஒவ்வாமை
குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.
குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.
உணவு சாப்பிட மறுத்தால்
Baby healthy foodசில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.
சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.
Baby healthy foodநன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.
குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.

0 comments:

Post a Comment