Pages

Sunday, 1 July 2012

தலைமுடி பராமரித்தல்


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அழகு என்பது வெறும் வெளித்தோற்றம் சார்ந்த விசயம் மட்டும் அல்ல. மேக்கப் சாதனங்களால் வண்ணங்களை பூசி, உண்மை தோற்றத்தை மறைத்து, போலி அலங்காரம் கொடுக்கும் விசயமும் அல்ல. உள்ளத்தூய்மையும், உடல் தூய்மையுமே உண்மையான அழகு. உள்ளத் தூய்மை என்பது மனம் சார்ந்த விசயம். அது ஒரு தனிக்கடல். இங்கே உடல் தூய்மையை கருவாய் எடுத்துக்கொண்டு, தலை முடி முதல் பாதம் அடி வரை உடல் உறுப்புகளை எவ்வாறு பராமரிப்பது, அவற்றை அழகாய், ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வது எப்படி என்பதை திருமதி. தேவா அவர்கள் விளக்குகின்றார். அறுசுவை மன்றத்தில் பல வருடங்களாக அழகுக் குறிப்புகள் கொடுத்து, அனைவருக்கும் பரிச்சயமாய் இருக்கும் தேவா அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உறுப்புகளை பராமரிப்பது பற்றி இங்கே விளக்குகின்றார்.
'அறிவை கூந்தலின் நறியவும் உளவோ' என்ற குறுந்தொகை காலந்தொட்டு, கார் குழல், கருமேகக் கூந்தல் என்று இன்றளவும் தலைமுடிக்கு கவிஞர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள். அதில் நியாயம் இருக்கின்றது. புறத்தோற்றத்தை சிறப்பாய் காட்டுவதில் முதன்மை வகிப்பது தலைமுடிதான். அதனால்தான், வாழ்க்கையில் எதை இழந்தும் கவலைப்படாத பலர், தலைமுடி உதிர்வதற்கு வாழ்க்கையே தொலைந்ததுபோல் வருத்தப்படுவார்கள். உடலின் உச்சியில் இருக்கும் அந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைமுடி பராமரிப்பில் இருந்து இந்த பகுதி தொடங்குகின்றது.
தலைமுடி
முடி உதிரும் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, வழுக்கை என்று பலருக்கும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது, குழந்தையின் க்ராடில் க்ராப்பிலிருந்து வயதானவர்கள் வரை தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏராளம். காலம் காலமாக நமது வீடுகளில் பல இயற்கை முறைகளை பின்பற்றி வந்தாலும், தலைமுடி பிரச்சனை இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள், எனக்கு இந்த தண்ணீர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஓரளவிற்கு தண்ணீரால் முடி கொட்டும் என்பது உண்மையென்றாலும், நாம் சாப்பிடும் உணவு, கடைபிடிக்கும் சில வழிமுறைகள் மூலமாக இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.
baby bath
தொட்டிலில் தொடர்ந்து படுப்பதால், பிறந்த குழந்தைகளுக்கு பொடுகு தொல்லை ஏற்படும். இதனை போக்க தலையில் எண்ணெய் வைத்து 10 நிமிடம் போல் ஊறவிட்டு பிறகு அலசவேண்டும். தொட்டில் துணியை அடிக்கடி மாற்ற வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ந்து தூங்கினால் சிறிது இடம் மாற்றிப் போடவேண்டும்.
தலைமுடி உதிரும் பிரச்சனைக்கு ஆண்களைப் பொறுத்த வரை பரம்பரையும் ஒரு காரணமாக இருக்கிறது. அதற்கு ஹேர் வீவிங் போன்ற சில சிகிச்சை முறைகளைத்தவிர வேறு எந்த மருந்தும், உணவும் தீர்வாக சொல்லப்படவில்லை. சின்ன வெங்காயம் தடவுவது, மூலிகை எண்ணெய் தடவுவது போன்ற சிகிச்சை முறைகள் சொல்லப்பட்டாலும் அதன் பலன் 100% இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. பெண்களைப் பொறுத்தவரை வழுக்கை என்ற விஷயம் இல்லாவிட்டாலும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. முடி கொட்டுவதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் நல்ல சமச்சீரான, சத்தான உணவாக இருப்பது அவசியம். தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும், இரத்த சோகை இருப்பவர்களுக்கும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். மருத்துவரை கலந்து ஆலோசித்து அவர் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதே இதற்கு நல்ல தீர்வு. நாம் கூந்தலை சரியான முறையில் பராமரிக்கும் போது முடி கொட்டுவதை தவிர்க்கலாம். பொடுகு தலையில் இருந்தாலும் முடி கொட்டும்.
Hair care
தலையை வாரம் இரு முறை அலசினால் போதுமானது. ஷாம்பூ போட்டு அலசும் போது நமது முடி இழக்கும் ஈரப்பதத்தை மீண்டும் ஈடுகட்டவும், முடியின் pH அளவை சமச்சீராக வைத்திருக்கவும், முடி ஸ்மூத்தாக இருக்கவும் கண்டிஷனர்(conditioner) உதவுகிறது. கண்டிஷனரை வேர்க்கால்களில் படாமல் அப்ளை செய்வது நல்லது. மேலோட்டமாக மண்டையில் படாமல் ( 1 செ.மீ அளவேனும் இடைவெளி விட்டு) முடிக்கு மட்டும் படுமாறு கண்டிஷனர் அப்ளை செய்தால் முடி கொட்டாமல் ஸ்ட்ராங்காக இருக்கும். அடிக்கடி அல்லது தினமும் தலை குளிப்பவர்கள் மிகவும் மைல்டான ஷாம்பூ உபயோகிப்பது நல்லது. இப்போது டெய்லி கேர் ஷாம்பூக்கள் (daily care shampoo) பல மார்க்கெட்டில் கிடைக்கின்றன. தினமும் கண்டிஷனர் உபயோகிப்பது நல்லதல்ல. ஆண்ட்டி டாண்ட்ரப் ஷாம்பூக்களை தினமும் உபயோகப்படுத்துவது முடியை பாதிக்கும். வாரம் ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதுமானது. தலைக்கு அடிக்கடி பெர்மிங் (perming), ஸ்ட்ரெயிட்னிங் (straightening) என்று ப்யூட்டி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வதும் முடியை பாதிக்கும்.
Hair treatment
வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்
எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25
பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ
மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்
கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் அளவு
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை. வெளிநாட்டில் இந்தப் பொருட்கள் கிடைப்பது அரிது.
பொடுகை நீக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் பெரும்பாலானோர் புலம்புவது ஏன் இத்தனை ட்ரீட்மெண்ட் எடுத்தும் மீண்டும் மீண்டும் பொடுகு வருகிறது என்றுதான். நன்றாக கவனமாக இருந்தோமென்றால் நிச்சயம் பொடுகை அறவே ஒழிக்க முடியும். பொடுக்கு எத்தனையோ ஆண்ட்டி டாண்ட்ரஃப் ஷாம்பூக்கள் இருக்கின்றன. Head & Shoulder, Clinic All clear மற்றும் மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஷாம்பூக்கள் என்று அத்தனையுமே பொடுகை நீக்கினாலும் நாம் கவனமாக இல்லாவிட்டால் மீண்டும் வந்துவிடும். இயற்கையான ட்ரீட்மெண்ட் என்றால் எலுமிச்சை சாறு மிகச்சிறந்த மருந்து. தலையில் தடவும்போது எரிச்சல் ஏற்படும். ஆனால் பொடுகை அறவே நீக்கும். மிளகு அரைத்து தயிரில் கலந்து தடவுவதும் நல்ல பலனை தரும்.
பொடுகுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன் முதலில் அதனை மீண்டும் வர விடாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். சீப்பு, பெட்ஷீட், போர்வை, துண்டு, தலையணை உறை எல்லாவற்றையும் கழுவி அல்லது புதிதாக உபயோகப்படுத்துக்கள். இல்லாவிட்டால் நீங்கள் ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு சீப்பு வழியாகவோ, தலையணை மூலமாகவோ மீண்டும் பரவிவிட வாய்ப்பு அதிகம். தலை மிகவும் வறண்டு இருந்தாலும் பொடுகு வரும். கண்டிஷனரை தலையில் முடி வேர்வரை போட்டாலும் பொடுகு வரும்.
Hair combing
முடியை பெர்மிங் செய்வதாக இருந்தாலும், ஸ்ட்ரெயிட்னிங் செய்வதாக இருந்தாலும், வீட்டில் நீங்களாகவே முயற்சிப்பதற்கு முன்பு, சலோன் (parlour) சென்று ஆலோசனை பெறுங்கள். ஒவ்வொரு முடியும், முக அமைப்பும் வேறு. ஒருவருக்கு பொருந்தின ஹேர் ஸ்டைல் இன்னொருவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. முடியின் தன்மை, முகவெட்டுக்கு தகுந்தாற்போல் ஹேர்ஸ்டைல் செய்துக் கொள்ளுங்கள். நம்மால் பராமரிக்க முடிந்த ஹேர் ஸ்டைல் செய்து கொள்வது நல்லது.
அதிக ஃப்ரிஞ்சஸ், ஸ்டெப் கட், லேயர்ஸ் போன்றவை எல்லோராலும் எளிதாக பராமரிக்க முடியாது. ஒரே ஹேர் ஸ்டைலில் இல்லாமல் வித விதமான ஹேர்ஸ்டல் செய்து கொள்வது எப்போதும் ஒரு புதிதான தோற்றத்தை கொடுக்கும். இழுத்துப் பிடித்து சடை போட்டுக் கொள்வது பிடிக்கிறது. அதையேதான் பின்பற்றுவேன் என்று இல்லாமல் ஒரு வித்தியாசத்திற்கு மாறுதலான ஒரு ஹேர்ஸ்டைல் செய்து பாருங்கள். சில ட்ரெஸ்களுக்கு லூஸ் ஹேர் மிகவும் அழகாக இருக்கும். அப்படி லூஸ் ஹேர் வேண்டுமென்றால அதற்கு ஒன்று ஹேரை ஸ்ட்ரெயிட்னிங் செய்து செட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முடி பறக்காவண்ணம் செட் செய்வதற்கென்றே உள்ள ஸ்ப்ரே அல்லது க்ரீம் உபயோகப்படுத்தலாம். ஆனால் வேர்க்கால்களில் படாமல் உபயோகிக்க வேண்டும். தலை குளிப்பதால் இழக்கும் முடியின் ஈரப்பதத்தை பாலன்ஸ் செய்ய இப்போது ஹேர் ஸ்ப்ரே, மூஸ் (mousse) என்று பல ரகங்கள் கிடைக்கின்றன. அவற்றில் உங்களது சலோன் கண்சல்டண்டின் ஆலோசனை கேட்டு உங்கள் கூந்தலுக்கேற்ற தயாரிப்பை வாங்குங்கள்.
சில இயற்கை முறைகளைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். நல்லெண்ணெய் உடல் சூட்டை குறைப்பதுடன் முடியை கருப்பாக்க மிகவும் உதவும். ஆனால நல்லெண்ணெய் முகத்திற்கு போடுவது சரும நிறத்தை கருமையாக்கும். விளக்கெண்ணெய் கண் புருவம், இமை முடிகள் வளர தடவலாம். முட்டை முடிக்கு நல்ல ஷைனிங் தரும். அடிக்கடி உபயோகித்தால் முடி வறண்டு விடும். பேரிச்சை, கீரை போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து சீயக்காயுடன் சேர்த்து இயற்கையான கருமை நிறத்துக்கு உபயோகிக்கலாம். மருதாணி முடிக்கு மிகவும் நல்லது. இயற்கையான சாயத்திற்கும், குளிர்ச்சிக்கும் மிகவும் நல்லது. உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் போன்றவை முடிக்கு நல்லதல்ல.
hair care kit
பேன் பிரச்சனைக்கு மருந்து போடுவது நல்லது. பொடுகு ட்ரீட்மெண்ட் போலவே இதற்கும் ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு கவனமாக தலையணை உறை முதற்கொண்டு மாற்றுவது அவசியம். ஏதேனும் விசேஷங்களுக்கு இடிமுடி வைத்து பின்னுவதாக இருந்தாலும் தரமானதாக உபயோகியுங்கள். முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கருவேப்பிலை மூன்றையும் அரைத்து வடைகளாகத் தட்டி நிழலில் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி கருமையாக நன்றாக இருக்கும். சூடத்தை (கற்பூரம்) தேங்காய் எண்ணெயில் போட்டு தடவி வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அதனை தலைக்கு தடவினால் உடல் குளிர்ச்சிக்கு நல்லது.
நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, நல்ல தண்ணீர், நல்ல பராமரிப்பு தலை முடிக்கு மிகவும் அவசியம். எவ்வளவு அழகான முகமாக இருந்தாலும் ஹேர்ஸ்டைல் நன்றாக இல்லாவிட்டால் எடுப்பாக இருக்காது. நல்ல மேக்கப்பையும் மோசமான ஹேர்ஸ்டைல் பாழ்பண்ணிவிடும். எனவே தலை முடிக்கு தனியான கேர் கொடுப்பது மிக அவசியம். யாருக்கு என்ன ஸ்டைல் நன்றாக இருக்கும் என்று நான் இங்கே குறிப்பிடவில்லை. காரணம், ஸ்டைலை விட அதை மெயிண்டெயின் பண்ணுவது முடியுமா என்ற விஷயத்தை யோசித்துவிட்டு தேர்ந்தெடுப்பது அவசியம்.

0 comments:

Post a Comment