Pages

Tuesday 31 July 2012

செய்தி குறிப்பு


மின் பிரச்சனைக்கு மாநிலங்கள் மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் - July 31, 2012 8:18 pm
நாட்டின் வடபகுதிகளில் ஏற்பட்டுள்ள மின் பிரச்னைக்கு, சில மாநிலங்களே காரணம் என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
வட மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்யும் மின் தொகுப்பில் இன்று மீண்டும் கோளாறு ஏற்பட்டதால், வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மின்சாரம் தடைபட்டது.
இதனால் 22 மாநிலங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின. சுமார் 65 கோடி பேர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்னை காரணமாக சுமார் 300 ரயில்களின் சேவை பாதிப்புக்கு ஆளானது.
குறிப்பாக, டெல்லி – ஹவுரா இடையேயான ரயில் போக்குவரத்து முடங்கியது. நீண்ட தூர ரயில்கள், ராஜ்தானி மற்றும்  சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை பெரிதும் தடைபட்டது.
வட மாநிலங்களில் கடந்த 50 ஆண்டுகளில் இந்த அளவு மின்சார பிரச்னை ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது. இதற்கு சில மாநிலங்கள் அளவுக்கு அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துவதே காரணம் என மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே குறை கூறியுள்ளார்.

அமைச்சர்கள் இலாகா மாற்றம்: ப.சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சர்

பதிவு செய்த நாள் - July 31, 2012 7:17 pm
மத்திய அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கு நிதி அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மூன்றாவது முறையாக சிதம்பரம் இந்தியாவின் நிதி அமைச்சராகியுள்ளார். நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரான பின்னர் அப்பொறுப்பை பிரதமர் மன்மோகன் சிங்கே கவனித்து வந்தார்.
இந்த நிலையில் நிதி அமைச்சர் பொறுப்பு சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் வகித்துவந்த உள்துறை அமைச்சர் பொறுப்பு சுஷில் குமார் ஷிண்டேவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சுஷில்குமார் ஷிண்டே வகித்துவந்த மின்துறை அமைச்சர் பொறுப்பு கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சரவையின் இந்த இலாகா மாற்றத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

வருமான வரிக்கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு

பதிவு செய்த நாள் - July 31, 2012 7:54 pm
2011-12 ம் நிதியாண்டுக்கான வருமானத்துக்கு வரிக்கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு  மாத காலம் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 31ம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கடைசி  நாளில் ஏற்பட்ட சிரமத்தை அடுத்து வருமான வரித்துறை இந்த காலஅவகாசம் வழங்கி இருக்கிறது. இதனால், வருமான வரி அலுவலகத்தில் நேரில் சென்றும், இணைய தளம் உள்ளிட்ட வகையில் வரிக்கணக்கு தாக்கல் செய்வோரும் பலன் அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடலை பெறுவதில் சிரமம் : தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானவர் உறவினர்கள் புகார்

பதிவு செய்த நாள் - July 31, 2012 12:33 pm
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே நேற்று தீ விபத்துக்குள்ளானது. இதில் 28 பேர் பலியாகினர். தீ விபத்தில் சிக்கி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகமது மைதீன் என்பவரும் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததை அரசு உறுதி செய்த போதிலும் உடலை ஒப்படைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாணிக்க கல் வணிகரான முஹமது மைதீன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் விஜயவாடாவில் இருந்து சென்னை வந்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். ரயில் பெட்டியில் இருந்த  உடைமைகள் மூலம் முகமது மைதீன், தீ பிடித்த பெட்டியில்தான் பயணித்தார் என்பதை அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் சில உடல்களை அடையாளம் காணமுடியாததால் முகமது மைதீனின் உடலை ஒப்படைப்பதில் சிரமம் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே முகமது மைதீனின் உடலை பெற்றுத்தர தமிழக அரசு அதிகாரிகள் உதவ வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment