Pages

Monday 23 July 2012

செய்தி குறிப்பு


தமிழ் ஈழப் போராட்டம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானதல்ல: விடுதலைப்புலிகள் விளக்கம்

பதிவு செய்த நாள் - July 23, 2012 12:22 pm
தமிழ் ஈழப் போராட்டம் இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானது அல்ல என விடுதலைப்புலிகள் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீதான தடையை நீட்டிக்கும்போது, இந்திய அரசு வெளியிட்டுள்ள கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை என விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் அறவழிப் போராட்டங்கள் பயனற்றுப் போன காரணத்தினாலேயே ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட நேர்ந்ததாகவும், இத்தகைய ஆயுதப் போராட்டம் தொடங்கிய சமயத்தில், இந்திய அரசு அதற்கு உதவியும் ஊக்கமும் அளித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது போராட்டம் இந்திய இறையாண்மைக்கோ இந்திய மக்களுக்கோ எதிரானதல்ல என்றும்,தங்களது மண்ணையும் மக்களையும் பாதுகாக்கவே போராடி வருவதாகவும் அந்த அமைப்பு விளக்கமளித்துள்ளது. எனவே, தங்களது போராட்டத்தின் நியாயத்தையும் தேவையையும் புரிந்துகொண்டு தங்களது மக்களுக்கான பாதுகாப்பையும், நிரந்தர அரசியல் தீர்வையும் பெற்றுத்தர இந்திய அரசு உதவவேண்டும் என விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் இலச்சினையோடு, அதன் தலைமைச் செயலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் எவரும் கையெழுத்திட்டிருக்கவில்லை.

உலகம் முழுக்க 1040 லட்சம் கோடி கறுப்பு பணம் பதுக்கல்

பதிவு செய்த நாள் - July 23, 2012 7:44 pm
கறுப்புப்பண பிரச்னை இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. உலக நாடுகள் பலவற்றுக்கும் பொது பிரச்னையான இதில், பல நாடுகளின் வரி ஏய்ப்பாளர்கள், மற்ற நாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு 1,040 லட்சம் கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த டேக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த தொகை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்புக்கு இணையானது என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
கறுப்புப்பண பதுக்கல் குறித்து, இதற்குமுன் ஏராளமான யூகங்கள் வந்திருந்தாலும், இப்போதைய தங்கள் கணிப்பு இன்னும் துல்லியமானதாக இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல வளரும் நாடுகளில் இருந்து, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம், அந்நாடுகளின் ஒட்டுமொத்த கடன்களை விட அதிகம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை 70 காசுகள் உயர்வு

பதிவு செய்த நாள் - July 23, 2012 8:04 pm
பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. 70 காசுகள் உயர்வு என்பது , வாட் வரிக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலங்களிலும் விலை உயர்வு வேறுபடுகிறது.
புதிய விலையின் படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 89 காசுகள் உயர்ந்து  72 ரூபாய் 97 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
தலைநகர் டெல்லியில் , 67 ரூபாய் 78 காசுகளாக இருந்த பெட்ரோலின் விலை, 68 ரூபாய் 48 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மும்பையில் 73 ரூபாய் 35 காசுகளாக இருந்த, பெட்ரோல் விலை, 74 ரூபாய் ஐந்து காசுகளாக உயருகிறது.
கொல்கத்தாவில் 72 ரூபாய் 74 காசுகளாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, 73 ரூபாய் 44 காசுகளாக உயர்ந்துள்ளது.


0 comments:

Post a Comment