Pages

Monday 18 June 2012

கண்டிக்கப்பட வேண்டியதே…


நேற்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்வு, அனைத்து ஜனநாயக சக்திகளாலும்  கண்டிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு.  ஜெயலலிதா அரசின் அற்பத்தனங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதற்கு நேற்றைய நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.
latest
எழுத்தாளர் சின்னக்குத்தூசியின் 78வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின் சார்பாக அண்ணா சாலையில் உள்ள தேவணேயப்பாவானர் அரங்கம் (எல்.எல்.ஏ பில்டிங்) முன்பதிவு செய்யப்பட்டது.  இந்த அரங்கத்திற்கான முன்பதிவு ஜுன் 8 அன்று நிகழ்ச்சி அமைப்பாளர்களால் செய்யப்பட்டு முன்பதிவுக் கட்டணமும் வழங்கப்பட்டுள்ளது.   அந்த அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்துவ தென்றால், அண்ணாசாலை காவல்நிலையத்தில் ஒரு கடிதம் பெற்றுத் தர வேண்டும்.  ஆகையால், அதையும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்திருப்பார்கள்.
முன்பதிவுக் கட்டணம் கொடுத்ததும், விழாவுக்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன. விழாவில் தோழர் நல்லக்கண்ணு, பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது.    விழா ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில், அந்த அரங்கத்தின் பொறுப்பாளரான மாவட்ட நூலக அலுவலகத்தின் கண்காணிப்பாளர், விழா அமைப்பாளர்களுக்கு ஒரு அறிவிக்கை அளிக்கிறார்.  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் நான்காம் தொகுதி தேர்வுக்கான பாடநூல்கள் தேவனேயப்பாவாணர் அரங்கத்தில் வழங்க இருப்பதால், ஏற்கனவே நிகழ்ச்சிக்காக கொடுத்த முன்பணத்தை திருப்பி அளிக்குமாறும், முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது என்றும் அறிவித்தனர்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், நூலகத் துறையின் உத்தரவை எதிர்த்து ஒரு அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிபதி கே.சந்துருவின் முன்பு விசாரணைக்கு வந்தது.   வழக்கை விசாரித்த நீதிபதி, “நூலக அதிகாரிகள் நிகழ்ச்சிக்காக ஏற்கனவே பணத்தை வசூல் செய்து அனுமதியும் வழங்கியுள்ளார்கள். இதையடுத்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அழைப்பிதழ்களையும் அச்சடித்துள்ளார்கள்.    நிகழ்ச்சி நடக்கும் அன்று 3 மணிக்கு அனுமதியை ரத்து செய்தது தேவையற்றது” என்று தீர்ப்பளித்தார்.
நீதிபதிகளுக்கும், நீதிமன்றத்துக்கும் அரசு நிர்வாகம் எத்தகைய மரியாதையை வைத்திருக்கிறது என்பதற்கு அடுத்து என்ன நடந்தது என்பது ஒரு உதாரணம்.
வழக்கமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகள் இரண்டு நாட்கள் கழித்தே கிடைக்கும். சில சமயம் வாரக்கணக்கில் கூட ஆகலாம்.   அவசர நேர்வுகளில், அந்த வழக்கு நடக்கும்போதே, Issue Today – இன்றே வழங்க உத்தரவிடுங்கள் என்று வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் உத்தரவு கேட்பது வழக்கம்.   அப்படி இன்றே வழங்கவும் என்று உத்தரவிட்டாலும், உத்தரவு கையில் கிடைப்பதற்கு இரவு எட்டு மணி ஆகி விடும்.
இந்த நேர்விலும் அப்படியே நடந்துள்ளது.  நிகழ்ச்சி 6 மணிக்கு.   விழா அமைப்பாளர்கள் தீர்ப்பு நகலுக்காக நீதிமன்றத்தில் காத்திருக்கையில், நூலக அதிகாரிகள், நாங்கள் 6 மணி வரை காத்திருக்கிறோம்.  அதற்குள் தீர்ப்பு வரவில்லையென்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று அரங்கத்தை பூட்டி விட்டு சென்று விட்டார்கள்.
வேறு வழியின்றி, அந்த நிகழ்ச்சி, நூலக வளாகத்தின் வாகன நிறுத்தும் இடத்தில் நடத்தப்பட்டிருக்கிறது.
தீர்ப்புகள் இரவு எட்டு மணிக்கு ஏன் தாமதம் ஆகிறது என்று தோன்றும்.   இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது.  நீதிபதியின் தீர்ப்புகளை சுருக்கெழுத்தில் எழுதும் சுருக்கெழுத்தர்கள், அத்தீர்ப்புகளை தட்டச்சு செய்து, முதல் முறை நீதிபதியிடம் எடுத்துச் செல்வார்கள்.  அவர் அதில் திருத்தங்கள் செய்து, மீண்டும் நீதிபதியிடம் எடுத்து வருவார்.  மீண்டும் அதில் திருத்தங்கள் இல்லையென்றால் மட்டுமே அது அச்சடிக்கப்படும்.  தீர்ப்பினை தட்டச்சு செய்யும் நீதிமன்ற ஊழியர், அதை ஒரு கணினியில் ஏற்றி மற்றொரு பிரிவுக்கு மாற்றுவார்.  மற்றொரு பிரிவில் அதை அச்செடுத்து அந்தப் பிரிவு அதிகாரியிடம் கொடுப்பார்.  அந்த அதிகாரி அதை சரிபார்த்து தீர்ப்பு நகல் வழங்கும் பிரிவுக்கு அனுப்புவார்.  இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகு, தீர்ப்பு வழக்கறிஞர் கைக்கு வந்து சேர்வதாலேயே இத்தனை தாமதம்.  இதில் நீதிமன்ற ஊழியர்கள் காலம்தாழ்த்துகிறார்கள் என்று குறை சொல்ல முடியாது.    அவர்கள் பணியாற்றுவதை நேரில் பார்த்தீர்களேயானால், இப்படியும் பணியாற்றும் அரசு ஊழியர்கள் இருக்கிறார்களா என்று வியப்பு எழும்.   அவர்கள் தாமதப்படுத்த மாட்டார்கள்.
சரி.  நேற்றைய நக்கீரன் நிகழ்ச்சி குறித்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கு வேறு வழியே இல்லையா ?   இருக்கிறது.  நீதிபதி சந்துரு அவர்களுக்கு, இந்த சிகப்பு நாடா நடைமுறைகளும், அரசு இயந்திரத்தின் அயோக்கியத்தனங்களும் அத்துப்படி.    தீர்ப்பு வழங்கையிலேயே  அவர் அந்த நீதிமன்றத்தில் இருக்கும் அரசு வழக்கறிஞரைப் பார்த்து, இந்தத் தீர்ப்பின் விபரத்தை நூலகத்துறை இயக்குநருக்கு உடனடியாக தொலைபேசியில் தெரிவியுங்கள் என்று கூறியிருக்க வேண்டும்.   அவரிடம், நான் இத்தகவலை தெரிவிக்கிறேன் என்று நீதிமன்றத்தின் முன்பாக ஒரு உத்தரவாதத்தை பெற்று, அதை தீர்ப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.   நீதிமன்ற ஊழியர்களிடம், இத்தீர்ப்பின் நகலை, நூலகத்துறை இயக்குநருக்கும், தலைமைச் செயலாளருக்கும் தொலைஅச்சு (பேக்ஸ்) மூலம் உடனே அனுப்புங்கள் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும்.    அதை நீதிபதி சந்துரு ஏன் செய்யத் தவறினார் என்பதுதான் புரியவில்லை.
நக்கீரன் நிர்வாகத்தினர், இத்தீர்ப்பினை செயல்படுத்தாமல் தவறிய நூலகத்துறை மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பார்களா என்று தெரியவில்லை.  ஆனால், சிகப்பு நாடா நடைமுறை காரணமாக, இது போல பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடியவில்லையே என்ற வருத்தம்,  திரு கோபால் அவர்களுக்கும், திரு காமராஜ் அவர்களுக்கும் நிச்சயம் இருக்கும்.   இந்த நேரத்தில் எழும் தவிர்க்க இயலாத ஒரு கேள்வி... ...  சின்னக் குத்தூசி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று இவர்கள் நினைத்திருந்தால், இவர்களுக்கு நெருக்கமான  கருணாநிதியின் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடத்தியிருக்கலாமே...  அல்லது வேறு எத்தனையோ தனியார் அரங்கங்கள் இருக்கின்றன.. அங்கு நடத்தியிருக்கலாமே... அரசு அரங்கத்தில் நடத்த முயற்சித்ததே ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமா என்ற சந்தேகமும் தவிர்க்க இயலாமல் எழுகிறது.  
இவர்கள் இருவரும், கடந்த திமுக ஆட்சியில் என்ன நடந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
2009ம் ஆண்டு தொடக்கம் முதலே பத்திரிக்கைகளின் குரல்வளை அப்போதிருந்த உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட்டால் நெறிக்கப்பட்டது.  ஊடகத்தின் சுதந்திரத்தை குழிதோண்டிப் புதைத்தார் ஜாபர் சேட்.   ஜாபர் சேட்டின் ஆருயின் நண்பராக இன்னும் இருக்கும்  காமராஜ், ஒரு பத்திரிக்கையாளராக இருந்துகொண்டு, அதுவும் அரசின் ஒடுக்குமுறையிலேயே வளர்ந்த ஒரு பத்திரிக்கையைச் சேர்ந்தவராக இருந்து கொண்டு, இந்த ஜனநாயகப் படுகொலைக்கு  துணைபோனதும் இல்லாமல், ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்தார். தமிழ் பத்திரிக்கை உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களான விகடன், குமுதம் போன்றவர்களும் இந்த அடக்குமுறைக்குத் தப்பவில்லை.  இவர்களை விடப்  பெருமுதலாளிகளான ஆங்கில ஊடகங்களும் இந்த அடக்குமுறைக்கு பணிந்தே சென்றன.  பணிய மறுத்த ஊடகங்களின் செய்தியாளர்களும், முதலாளிகளும், பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.
kamaraj_5
அரசை எதிர்த்து எந்தப் போராட்டங்கள் நடத்தினாலும் அதற்கு அனுமதி மறுக்கப்படும்.   தடையை மீறி நடைபெறும் போராட்டங்களில் கைது செய்யப்படுபவர்கள், மாலை விடுவிக்கப்படுவார்கள் என்ற மரபை மீறி, 15 நாள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.  பல்வேறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் 15 நாள் சிறைக்குச் சென்றால் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது ? எத்தனைபேரால் இப்படி போராட்டங்களில் கலந்து கொள்ள  முடியும் ?
போராட்டங்களுக்குத்தான் இப்படியென்றால், அரங்கக் கூட்டங்களுக்கும் நக்கீரன் குழும நிகழ்ச்சிக்கு நடந்த கதிதான்.    அனுமதி வழங்கிவிட்டு, இறுதி நேரத்தில் அனுமதி மறுப்பார்கள்.  பணத்தை செலவு செய்து நிகழ்ச்சிக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த, அமைப்பாளர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்பார்கள்.
தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு போராட்டங்களுக்கு இது போல இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.   அனைவரும் பங்குகொள்ள ஏதுவாக இருக்கும் என்று பெரும்பாலும் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளிலேயே ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.  அப்படி ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கேட்டு 10 நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுத்தாலும், அனுமதி மறுக்கும் கடிதம் எப்போது கொடுப்பார்கள் தெரியுமா ?  வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குத்தான் கொடுப்பார்கள்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துண்டறிக்கைகள் தயார் செய்து, சுவரொட்டிகள் ஒட்டி, பேச்சாளர்களை அழைத்து எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் இப்படிச் செய்வார்கள்.   வெள்ளிக்கிழமை இரவு அனுமதி மறுப்பு கடிதம் கொடுத்தால் எப்படி நீதிமன்றம் செல்ல முடியும் என்ற உள்நோக்கமே தாமதமாக கொடுப்பதற்கு காரணம்.
karuna_adakku_murai
ஒரு முறை ஒரு சுவையான நிகழ்ச்சி நடந்தது.   புதிய தலைமைச் செயலக கட்டிடத் திறப்பு விழா அன்று, சென்னை மெமோரியல் ஹாலில் செங்கல்பட்டு முகாம் அகதிகளுக்காக ஒரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.    அன்று நிச்சயம் அனுமதி மறுக்கப்படும் என்பது தெரியும்.  துண்டறிக்கைகள் போடவில்லை. சுவரொட்டிகளும் அடிக்கவில்லை.  முதல் நாள் இரவு அனுமதி மறுப்பு கடிதம் வழங்கப்பட்டது.    மறுநாள் காலை முதல், தோழர்.புகழேந்திக்கு உளவுத்துறையிலிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்பு.  “சார்… தடையை மீறி நடத்தப் போறீங்களா… சொல்லுங்க சார்” என்று.  புகழேந்தி, நான் எங்கள் அமைப்பை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று பதில் கூறி விட்டார்.  சவுக்கு மற்றும் புகழேந்தியின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவது நன்கு தெரியும் என்பதால், இருவரும் பகல் 2 மணிக்கு தொலைபேசியில் பேசினோம்.  புகழேந்தி “தோழர் என்ன பண்ணலாம்.. நடத்தலாமா வேணாமா” என்று கேட்டதற்கு. “தோழர்.. ஆர்ப்பாட்டத்தை தடையை மீறி பண்ணா எப்படியும் கைது பண்ணுவாங்க.   தலைமைச் செயலகம் முன்னாடி போய் மறியல் பண்ணலாம்.  அப்போ கைது பண்ணட்டும். கொஞ்சம் பரபரப்பாகவாவது ஆகும்” என்றதும், புகழேந்தி “சரி மற்ற எல்லாருக்கும் தகவல் சொல்லுங்க.” என்று சொல்லி விட்டார்.
பகல் 3 மணிக்கு சுவையான மட்டன் பிரியாணியை வயிறு முழுக்க உண்டு விட்டு, 4 மணிக்கு இருவரும் செல்பேசியை அணைத்து விட்டு அலுவலகத்திலலேய உறங்கி விட்டோம்.   உறங்கிவிட்டு எழுந்து வீட்டுக்குச் சென்று விட்டோம்.    மறுநாள் காவல்துறையினர் சொன்ன தகவல், எப்படியும் மறியலில் ஈடுபடப்போகிறோம் என்று, புகழேந்தியை அடையாளம் தெரிந்த அத்தனை காவல்துறையினரையும், புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை சுற்றி சீருடை  இல்லாமல் நிறுத்தியிருக்கின்றனர்.  உயர்நீதிமன்றப் பணியில் இருப்பவர்களைக் கூட, அன்று பணிக்கு அழைத்து, புகழேந்தியையோ அவர் நண்பர்களையோ பார்த்தால், உடனே அடையாளம் கண்டு தகவல் சொல்ல வேண்டும் என்று உத்தரவாம்.
பல முறை ஆர்ப்பாட்டங்களுக்கு பணம் செலவு செய்து நடத்த முடியாமல் ஏமாந்ததால், அவர்களை பழி தீர்த்த ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.
2010 தொடக்கம் முதலே, ஊடகம் மீதும், ஊடக சுதந்திரம் மீதும் நெருக்கடிகள் கடுமையாக தொடர்ந்து அரசுக்கு எதிராக ஒரு வரிச் செய்தியைக் கூட வெளிடமுடியாது நிலை ஏற்பட்டிருந்த சூழல் அது.   இந்த நெருக்கடியின் வெளிப்பாட்டால்தான் சவுக்கு தளமே உருவானது.  அப்படிப்பட்ட சூழலில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஊடகத்துறையினர் சேர்ந்து கருத்துரிமைக் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, ஊடகத்தின் மீதான அடக்குமுறையைக் கண்டிக்கலாம் என்று முடிவெடுத்தபோது, ஒரு அரங்கக் கூட்டம் போடுவதற்கு அரங்கம் இல்லாமல் அலைய வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.   இறுதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் உதவியோடு, சென்னை கேரள சமாஜத்தில் தோழர் தமிழருவி மணியனை வைத்து ஒரு கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது.   அந்தக் கூட்டம் நடந்ததில் ஜாபர் சேட்டுக்கு அப்படி ஒரு கோபம்.
maniyan_photo
ஆனால்,   காமராஜ் என்ன செய்து கொண்டிருந்தார்  தெரியுமா ?  நாடே அதிர்ந்து போன 2ஜி ஊழலில் குற்றம் சாட்டப் பட்ட ஆ.ராசாவுக்கு எதிராக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதற்கு அவர் தலித் என்பதே காரணம் என்று ராசாவுக்கு ஆதரவாக, காகங்களை வைத்து கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.  (ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க) ஊடகங்கள் அத்தனையிலும் பார்ப்பனர்கள் நிறைந்திருப்பதால், ஒரு தலித் மத்திய அமைச்சராக இருக்கிறார் என்பதற்காக அவரை குற்றம் சொல்லுகிறார் என்று கூட்டங்கள் நடத்தியதோடு அல்லாமல், நக்கீரன் இதழிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.  ஒடுக்குமுறையிலும், அடக்குமுறையிலும் வளர்ந்த நக்கீரன் இதழின் நிர்வாகிகளான காமராஜோ, கோபாலோ, இந்த அடக்குமுறைகளை எதிர்த்து எழுதாததோடு மட்டுமல்லாமல், ஆதரித்தும் எழுதி வந்தனர்.
aram
IMG_9130

அன்று சவுக்கு, மற்றும் இதர ஜனநாயக சக்திகள் உண்ட அதே கசப்பு மருந்தை இன்று திருவாளர்கள் கோபாலும், காமராஜும் சுவை பார்க்கின்றனர்.   இந்த கசப்பின் சுவை என்ன என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள்.
ஆனால், தொடர்ந்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், கருத்துச் சுதந்திரத்துக்காகவுமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் சவுக்கு உள்ளிட்ட ஜனநாயக சக்திகள், அடக்குமுறையில் அதிமுக அடக்குமுறை, திமுக அடக்குமுறை என்று வேறுபாடு பார்ப்பதில்லை.  அடக்குமுறை எப்போதுமே அடக்குமுறைதான். அது திமுகவாக இருந்தாலும் சரி. அதிமுகவாக இருந்தாலும் சரி.  அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டால், அதைச் சாடுவதோடு மட்டுமல்லாமல், அதை எதிர்த்துப் போராடவும் தயங்காத சக்திகளே மக்களை நேசிக்கும் உண்மையான சக்திகள்.  இந்தச் சக்திகள், பாகுபாடு இல்லாமல் அடக்குமுறைகளை எதிர்ப்பதற்கு ஒரே காரணம், ஒரு ஆதரவையோ, எதிர்ப்பையோ, சாதிப் பாசத்தினாலோ, 2ஜி ஊழலில் கிடைத்த பங்குக்காகவோ வெளிப்படுத்துவதில்லை என்ற ஒரே காரணம்தான்.
சமச்சீர் பாடநூலில் கருணாநிதியின் வரிகளைக் கிழிப்பது, கைது செய்யப்பட்டவர்களை சிறை மாற்றம் செய்து அலைக்கழிப்பது, கருத்துரிமையை தடை செய்வது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் ஜெயலலிதா, வரலாற்றைப் படிக்க வேண்டும்.  அதிகார மமதையோடு, ஆணவமாக, யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்த பலரும், மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள்.   உலகின் மிக மிக வலுவான ராணுவத்தை கட்டி, உலகையே ஆள நினைத்த ஹிட்லருக்கு நேர்ந்த கதியை வரலாறு பாடமாக்கி  வைத்திருக்கிறது.
ஒரு சட்டமன்றத் தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றி பெற்றதால் ஏற்பட்ட அகந்தையில், தனக்கு எதிரான கார்டூன் வெளியிட்டவரை கைது செய்தார் மம்தா பானர்ஜி.  20 எம்.பிக்களை வைத்துக் கொண்டு, இந்தியாவின் எல்லா முடிவுகளையும் நான்தான் எடுப்பேன் என்று அகம்பாவமாக அலைந்த மம்தா பானர்ஜி, இன்று எப்படித் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார் என்பதைப் பாருங்கள்.
மக்களுக்கு நன்மை செய்வதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.   இது போல கூட்டங்களைத் தடை செய்வது, கருத்துரிமையை முடக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், வரலாற்றில் பல முறை நிகழ்ந்துள்ள அதே நிலைக்கத் தள்ளப்படுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

0 comments:

Post a Comment